நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge)
கடந்த இரண்டு வார காலமாக செய்தியில் அடிக்கடி வந்தது தொடர் தற்கொலைகள். ஏன் இந்த தற்கொலைகள்? நாம் 10ஆம், 12ஆம் மதிப்பென் பட்டியல் வெளிவந்ததும் சில தற்கொலை செய்திகள் வரும்போது இதை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்பொழுது என்ன கேடு வந்துவிட்டது, தற்கொலைக்கு என்று ஆச்சரிய பட்டிருப்போம். நான் அந்த கேடு என்ன என்று ஆராய தொடங்கியதும், பல உண்மைகளை தெரிந்துகொண்டேன்.
இந்த தொடர் தற்கொலைகள் ஒரு விளையாட்டால் வந்த விபரீதம். இதில் இறந்த குழந்தைகள் 15 முதல் 19 வயதை தாண்டாத பூக்கள். காயகி, கனியும் முன்பே தங்களை வாட்டி, வதக்கி மடிந்து போனார்கள். தாய், தந்தை, உற்றார், உறவினர், தோழன், தோழி வடித்த கண்ணீரில் உல்லாச நீச்சல் அடித்து கடந்து போனது நீலத்திமிங்கலம் (Blue Whale Challenge), அடுத்த பூவை வதைக்க.
இந்த 15-19 வயது, விடலை பருவம் எப்பொழுதும் விநோதமான எண்ண ஓட்டத்துடனே இருக்கும். சில நேரங்களில் மன மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்துடனும் கடந்து போகும்.
இந்த மன அழுதத்தை தான் இந்த விளையாட்டு உருவாக்கினவருக்கு தூண்டு கோளாக பயன்படுத்தி விளையாடுபவர்க்கு தற்கொலை எண்ணத்தை விதைப்பார்கள். இந்த விளையாட்டை உருவாக்கினவர் மனநல மருத்துவம் படிக்கும் மாணவர், கல்லூரியில் இருந்து விலக்க பட்டவர். இவரை கைது செய்து விசாரிக்கும் போது இந்த விளையாட்டை துவக்கிய காரணம் சமூகத்துக்கு உபயோகம் இல்லாதவர்களை அழிக்கவும் உருவாக்கினேன் என்றார்.
நம்முடைய வருங்கால சந்ததியினர் உபயோகம் அற்றவர்களா?
இல்லை. உறுதியாக இல்லை. இவர்கள் தான் எதிர்கால வித்துக்கள். நம்முடைய அறிவையும், அனுபவத்தையும் தாங்கி நிற்கும் தூண்கள். இவர்கள் தான் நம்முடைய கலாச்சாரத்தை பறைசாற்றும் மாதிரி பிம்பங்கள். நாம் ஒவொரு முறை அழிவை சந்தித்து மீண்டு வரும் போதும் நாம் வளர்ச்சி அடைந்தோம். நம் தவறுகளில் இருந்து பாடம் கற்று, தவறுகளை கலைந்தோம்.
இப்பொழுது நம் சந்ததியரை எப்படி காப்பது?
இந்த விளையாட்டில் இருந்து காக்க, இவர்களின் மன அழுத்தத்தை கலைய வேண்டும். இது மாதிரி பல பைத்தியக்கார விளையாட்டுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டுதான் இருக்கும். இதை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் சந்ததியற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
வழிமுறைகள் பின்வருமாறு:
1. அவர்கள் மன உணர்வுகளை புரிந்து கொண்டும், மனஅழுத்தத்தில் தக்க நேரத்தில் தாங்கி பிடிக்கவும், தவறாது மனதைரியத்தை கொடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. மனம் திறந்து அவர்கள் பேச வழிவகை செய்ய வேண்டும், அவர்கள் பேசும் போது கூர்மையாக கவனித்தல் அவசியம்.
3. எந்த சூழ்நிலையிலும் தம் பெற்றோர்கள் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும், அவர்களிடம் தெளிவான சிந்தனையை தூண்ட வேண்டும், அவர்கள் முழு பலத்தையும் தன்னம்பிக்கையையும் உணர செய்தல் வேண்டும்.
4.தற்கொலை பற்றி ஏதும் பேசினாலோ, அல்லது தற்கொலை பற்றிய கவித்துவமான சிந்தனைகளை வெளிப்படுத்தினால், உடனே பயப்படாமல் தற்கொலை பற்றிய சிந்தனையை கலைய எல்லா வித வழிமுறையையும் உபயோகித்து, வெளியில் கொண்டுவரவேண்டும்.
5.காலார நடை பயணத்துக்கு ஊக்குவிக்க வேண்டும், தோட்டத்தில் இளம் காற்று வீச மெதுவான நடை பல மனசிதறல்களுக்கு மருந்தாக அமையும்.
நடை பயணத்திற்கு மறுத்தால் கட்டாய படுத்தாமல் மெதுவாக சொல்லி சொல்லி புரிய வையுங்கள்.
வாழ்க்கை பற்றிய பல நல்ல விஷயங்களை சொல்வதும், வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியையும் மெதுவாக ஆனால் தொடர்ந்து கூறுங்கள்.
வாழ்வது எவ்வளவு சுகம் என்பதை புரிய வையுங்கள். அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திவிடுங்கள். அன்பு தான் மிக பெரிய வழி, அதை அழகாக பூ பூக்க வையுங்கள்.
Comments
Post a Comment